அதானி குழுமத்தின் பங்குகள் மீண்டும் பெரும் சரிவு!
அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள், மீண்டும் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கை:
அமரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், சமீப நாட்களாக நாடாளுமன்றம் முதல் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் மோசடியில் ஈடுபட்ட அதானி குழுமத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அதானி குழுமம் பங்குசந்தையை தவறாக கையாளுதல், முறைகேட்டில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழுமம் பங்குசந்தையில் தொடர் சரிவில் உள்ளது. இந்த அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியோடு, அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகவும் மாறியுள்ளது.
நாடாளுமன்றத்தில் அமளி:
அதானி பங்குச்சந்தை மோசடி தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரியும், இதுதொடர்பான விசாரணை நடத்த கோரியும் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இதுதொடர்பாக மத்திய அரசும், பிரதமர் மோடியும் எந்த பதிலும் அளிக்கவில்லை.
மறுபக்கம் ஹிண்டன்பர்க் அறிக்கையால், அதானி குழுமத்தின் பங்குகள் சரிவை கண்டதோடு, உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து தள்ளப்பட்டார். அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் தொடர் சரிவால், பல லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
மீண்டும் சரிவில் அதானி பங்குகள்:
இந்த நிலையில், அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் மீண்டும் பெரும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, அதானி கிரீன் எனர்ஜி பங்குரூ .36 குறைந்து, ரூ.688 ஆகவும், அதானி பவர் பங்கு ரூ.8 குறைந்து, ரூ.156 ஆகவும், அதானி ட்ரான்சிமிசன் பங்கு ரூ.59 குறைந்து, ரூ.1,127.35 ஆகவும், அதானி டோட்டல் கேஸ் பங்கு ரூ.63 குறைந்து, 1,192.65 ஆகவும், அதானி வில்மர் பங்கு ரூ.21.80 குறைந்து, ரூ.416.65 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதுபோன்று, அதானி போர்ட்ஸ் பங்கு ரூ.18 குறைந்து, ரூ.566 ஆகவும், அதானி என்டர்ப்ரைஸ் பங்கு ரூ.88 குறைந்து, ரூ.1,758 ஆகவும், அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கு ரூ.18 குறைந்து, ரூ.342 ஆகவும் மற்றும் ஏசிசி பங்கு விலை ரூ.72 சரிந்து, ரூ.1,808 ஆக வர்த்தகம் செய்யப்டுகிறது.