போதை பொருள் வழக்கில் கைதான நடிகை ராகினி திவேத் பாஜக உறுப்பினர் இல்லை..! கர்நாடக பாஜக அறிவிப்பு.!
போதை பொருள் விவகாரத்தில் கைதான ராகினி திவேத் பாஜக உறுப்பினர் இல்லை என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் அவர்களின் மரணத்தை அடுத்து பல குற்றச்சாட்டுகளை கங்கனா ரணாவத் கூறிய நிலையில் சமீபத்தில் பாலிவுட்டில் போதை பழக்கம் அதிகமாகி விட்டதாகவும், போதை மருந்து தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டால் பல பிரபலங்கள் சிக்கலாம் என்று கூறியதை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கன்னட திரையுலகில் போதை பொருட்களை விற்பனை செய்யும் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக கூறி கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரபல கன்னட நடிகையான ராகினி திவேத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தீவிரமாக போலீசார் ராகினியிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், இவர் பாஜக கட்சியினை சேர்ந்தவர் என்றும் , இவர் கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பாஜகவிற்கு ஆதரவாக பேசியதாகவும் கூறி பல வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், இதுகுறித்து கர்நாடக மாநில பாஜக தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். அதில் கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் ராகினி உட்பட பல நடிகர் மற்றும் நடிகைகள் பாஜகவிற்காக பிரச்சாரம் செய்ததாகவும், அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் மட்டுமே பிரசாரம் செய்ததாகவும், மற்றபடி அவர் பாஜக உறுப்பினர் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இது போன்ற சட்ட விரோதமான பிரச்சினைகளில் ஈடுப்பட்ட ராகினிக்கு ஆதரவாக பாஜக செயல்படாது என்றும் , அவரது சொந்த பிரச்சனைகளில் பாஜக தலையிடாது என்றும், அவரை காப்பாற்ற முயற்சியும் பாஜக செய்யாது என்றும் தெரிவித்துள்ளார்.