நீங்கள் வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு… மராட்டிய முதல்வரை தாக்கிய கங்கனா…
நீங்கள் வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு என்று மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவை நடிகை கங்கனா ரனவத் தாக்கி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை காவல்துறையையும், மராட்டிய மாநில அரசையும் நடிகை கங்கனா ரனவத் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் நடந்த சிவசேனா கட்சியின் தசரா பொதுக்கூட்டத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே கங்கனா ரணாவத்தை மறைமுகமாக தாக்கி பேசினார். அவர் பேசும்போது, ‘தங்களது வீட்டில் வாழ்வாதாரம் இல்லாமல் மும்பை வந்தவர்கள், வாழ்க்கை கொடுத்த மாநிலத்துக்கு துரோகம் செய்கின்றனர்’ என கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து நடிகை கங்கனா ரனவத், தனது டிவிட்டர் பதிவில், உங்கள் மகன் வயதில் உள்ள பெண் மீதான கோபத்தால், முதல்வராக நீங்கள் ஒட்டு மொத்த மாநிலத்தின் மாியாதையையும் குறைக்க வைத்திருக்கிறீர்கள். உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். சுயமாக முன்னேறிய ஒரு பெண் குறித்து இப்படித்தான் பேசுவீர்களா? நீங்கள் வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு. உங்களை பற்றி நீங்கள் வெட்கப்பட வேண்டும். ஒரு பொது ஊழியராக இருக்கும் நீங்கள் இதுபோன்ற சிறு சண்டைகளில் ஈடுபடுகிறீர்கள். உங்கள் சொந்த பலத்தை அவமதிக்கிறீர்கள். உங்களுடன் உடன்படாத மக்களுக்கு தொந்தரவு கொடுக்கின்றீர்கள். மன உளைச்சலை ஏற்படுத்துகிறீர்கள். நீங்கள் செய்வது அழுக்கு அரசியல்என்றும், இது அவமானம் என்றும் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.