5ஜி சேவைக்கு தடைவிதிக்க கோரிய நடிகை ஜூகி சாவ்லாவின் மனு தள்ளுபடி; 20 லட்சம் அபராதம் விதிப்பு!
நாட்டில் 5ஜி சேவைக்கு தடைவிதிக்க கோரிய பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லாவின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதுடன், அவருக்கு 20 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
இந்தியாவில் விரைவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த 5ஜி தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது எனவும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் பிரபல பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா அவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், இது குறித்து தெரிவித்த பாலிவுட் நடிகை ஜூகி, 5ஜி தொழில்நுட்பத்தின் கதிரியக்கத்தால் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், பூச்சிகள் என அனைத்துமே பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறியிருந்தார்.
தற்போது உள்ள கதிரியக்க அளவை விட 10 முதல் 100 மடங்கு அதிகமான கதிர்வீச்சை இந்த 5ஜி தொழில்நுட்பம் வெளியிடுவதால் மனிதர்களுக்கு மீள முடியாத கடுமையான பாதிப்பையும், சுற்றுச்சூழல் அமைப்பு நிரந்தர சேதத்தை உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்ததுடன், 5ஜி சேவைக்கு தடை விதிக்கக் கோரிய பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லாவிற்கு 20 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.