நடிகர் சுஷாந்த் மரண வழக்கு.. ரியாவுக்கு எதிரான விசாரணைக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம்
பீகார் போலீசார் பதிவு செய்த வழக்கு பதிவை தடைவிதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் வழக்கில் அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தான் தற்கொலைக்கு காரணம் எனவும், இவர்தான் தற்கொலைக்கு தூண்டினார் என பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜு நகர் காவல் நிலையத்தில் சுஷாந்த் சிங்கின் தந்தை புகார் கொடுத்தார். மேலும், சுஷாந்த் சிங் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.15 கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது எனவும் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பீகார் போலீசார் வழக்கு பதிவு செய்து ரியா சக்ரபோர்த்தியை விசாரிக்க மும்பைக்கு பீகார் போலீசார் சென்றுள்ளனர். இந்நிலையில், பீகார் போலீசார் பதிவு செய்த வழக்கு பதிவை தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ரியா சக்ரபோர்த்தி மனுதாக்கல் செய்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து , இந்த மனுமீதான விசாரணை இன்று வந்தது. அப்போது, பீகாரில் நடைபெற்றுவரும் விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது எனவும், நடிகர் சுஷாந்த்சிங் காதலி ரியா சக்கரவர்த்தி மீதான குற்றச்சாட்டு கடுமையானது என்று தெரிவித்தார். மேலும், மும்பை போலீசார் எந்த மாதிரியான விசாரணையை நடத்தி வருகிறது என்பது குறித்து சீலிடப்பட்ட கவரில் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் வழக்கை மும்பை போலீசார், பீகார் போலீசார் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.