காதலை ஏற்க மறுத்த திருமணமாகிய பெண்ணிற்கு ஆசீட் வீசி கொலை!
காதலை ஏற்க மறுத்த திருமணமாகிய பெண்ணிற்கு ஆசீட் வீசப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாவனா எனும் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய மோண்டு எனும் இளைஞர் திருமணமான ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அதன் பின் அந்த பெண்ணிடம் சென்று தான் அவரை விரும்புவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் அடிக்கடி கூறி வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த இளைஞர் அப்பெண் மீது ஆசிட் வீசி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனை அடுத்து இவர் பீகாரில் உள்ள பக்சர் மாவட்டத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த பெண், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், இளைஞர் சம்பவத்தன்று அந்த பெண்ணை வற்புறுத்தி தனது அறைக்கு அழைத்து வந்து இதுகுறித்து கேட்டதாகவும், ஆனால் அவர் தனது கணவரை விட்டுவிட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பெண்ணின் இரு கைகளையும் கட்டி விட்டு அவர் மீது ஆசிட் வீசி விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.