ஒரே மதத்திற்குள் ஒருவரை அடைத்து வைக்க முடியாது.! கேரளா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! 

Kerala High Court

கேரளா : ஒருவர் எந்த மதத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்பது அவர்களது உரிமை. அப்படி ஒருவர் மாற்று மதத்திற்கு மாறிவிட்டால் அந்த நபருக்கான ஆவணங்களில் தேவையான மாற்றங்களை அரசு அதிகாரிகள் செய்து தரவேண்டும் என கூறி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர்கள், இந்து மதத்தை சேர்ந்த பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள். பிறப்பால் இந்து மதத்தை சேர்ந்த அவர்கள் பின்னர் கடந்த 2017, மே மாதம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். அதனால், தங்களுக்கு பள்ளி சான்றிதழ்களிலும் மதத்தை மாற்றி தரவேண்டும் என கல்வி அலுவலர்களை மனுதாரர்கள் முதலில் அணுகியுள்ளனர்.

ஆனால், கல்வி அலுவலர்கள், பள்ளி சான்றிதழ்களில் மதத்தை மாற்றி தார மறுத்துவிட்டனர். இதனை அடுத்து தான், அவர்கள் கேரள உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அங்கு, நீதிபதி வி.ஜி.அருண் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

நீதிபதி வி.ஜி.அருண் அடங்கிய அமர்வு கூறுகையில், ஒருவர் பிறப்பால் எந்த மதத்தை வேண்டுமானால் சார்ந்து இருக்கலாம். ஆனால் அவரை அதே மதத்தில் கட்டிப்போட யாருக்கும் அதிகாரமில்லை. இந்திய சட்டப்பிரிவு 25(1)-ன் படி ஒருவர் தான் விரும்பும் மதத்தை பின்பற்றலாம். அதற்கு தேவையான உதவியை அரசு அதிகாரிகள் நடைமுறைப்படுத்தி தரவேண்டும்.

மாறாக , சான்றிதழ்களில் மதத்தை மாற்ற மறுப்பது அவர்களது எதிர்காலத்தை பாதிக்கும் செயலாகும். எனவே, கல்வி அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் மனுதார்களின் கல்வி சான்றிதழ்களில் உரிய மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் என கூறி கேரள உயர்நீதிமன்ற நீதிபதி வி.ஜி.அருண் அடங்கிய அமர்வு உத்தரவிட்டனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்