மணிப்பூர் துப்பாக்கி சூடு.! குக்கி ஆயுத குழுவினர் 10 பேர் சுட்டுக்கொலை.!
மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று நடந்த தாக்குதலில் 10 குக்கி இன கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என சிஆர்பிஎப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையேயான மோதல் கடந்த மே மாதம் தீவிரமடைந்தது. அதன் பிறகு, குறிப்பிட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது பிரச்சனை சற்று குறைந்து இருந்தது.
இருந்தாலும், இன்னும் சில இடங்களில் அங்கங்கே தாக்குதல்கள் நடைபெற்றாலும், பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாத நிலை இருந்து வந்தது. இப்படியான சூழலில் நேற்று மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் குக்கி இன கிளர்ச்சியாளர்கள் சிஆர்பிஎப் பாதுகாப்பு படையினர் முகாமை தாக்கியுள்ளனர். இதனால், பதில் தாக்குதலில் சிஆர்பிஎப் பாதுகாப்புப்படை வீரர்கள் தாக்குதலை தொடர்ந்துள்ளனர். இதில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று பிற்பகல், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் முகாம் மீது குக்கி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து சிஆர்பிஎப் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர் . இதில் சிஆர்பிஎப் வீரர் சஞ்சீவ் குமார் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில், 10 குக்கி இன கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பதில் தாக்குதல் முடிந்த பிறகு அவர்களிடம் இருந்து பல்வேறு ஆயுதங்களை சிஆர்பிஎப் வீரர்கள் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடம் இலகுரக இயந்திர துப்பாக்கிகள் (LMGs) மற்றும் INSAS ரைபிள்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இருந்ததாக சிஆர்பிஎப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.