அம்பேத்கரை விட மோடி பெரியவரா? கொந்தளித்த அதிஷி! சஸ்பெண்ட் செய்த சபாநாயகர்!
டெல்லி சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் அம்பேத்கர் புகைப்படம் நீக்கப்பட்டதாக கூறி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றியது. 22 எம்எல்ஏக்களை கொண்ட ஆம் ஆத்மி எதிர்க்கட்சியாக உள்ளது. டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தாவும், துணை முதலமைச்சராக பர்வேஷ் வர்மாவும் பதவியேற்றனர். எதிர்கட்சி தலைவராக முன்னாள் முதலமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு டெல்லி சட்டப்பேரவை கூடி நடைபெற்று வருகிறது. அப்போது டெல்லி சட்டமன்றத்திற்குள் நுழைந்த ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் , முதலமைச்சர் அறையில் இருந்த அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட்டுள்ளதாகவும் அதற்கு பதிலாக அங்கு பிரதமர் மோடி புகைப்படம் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர்.
டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா உரை ஆற்றிக்கொண்டிருக்கும் போது ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுப்பட்டனர். இதனை அடுத்து, அவர்களில் அதிஷி, கோபால் ராய், வீர் சிங் திங்கன், முகேஷ் அஹ்லாவத், சவுத்ரி ஜுபைர் அகமது, அனில் ஜா, விஷேஷ் ரவி மற்றும் ஜர்னைல் சிங் உட்பட 12 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை இன்று ஒருநாள் சபை நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என சஸ்பெண்ட் செய்து டெல்லி சட்டமன்ற சபாநாயகர் விஜேந்தர் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
“பாபாசாகேப் அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்றியதன் மூலம் பாஜக தனது உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளது. அம்பேத்கருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால், நாங்கள் சபையை விட்டு வெளியேற்றப்பட்டோம். அம்பேத்கரை விட மோடி பெரியவர் என பாஜக நம்புகிறதா? இதற்கு எதிராக தெருக்கள் முதல் சட்டசபை வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.” என அதிஷி PTI செய்தியாளர்களிடம் கூறினார்.