கொலை, கொள்ளை, உலகிலேயே பாதுகாப்பற்ற நகரமான டெல்லி! கெஜ்ரிவால் பரபரப்பு குற்றசாட்டு!
உலகிலேயே பாதுகாப்பற்ற தலைநகராக டெல்லி உருமாறியுள்ளது என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி : தலைநகர் டெல்லியில் இன்னும் 2 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2 முறையும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக தொடர்ந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் தனது முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு டெல்லி மாநில முதலமைச்சராக அதிஷி தற்போது பொறுப்பில் உள்ளார். நாட்டின் தலைநகர் என்பதால், மாநிலத்தின் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு முழுக்க மதிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்படியான சூழலில் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை அரவிந்த கெஜ்ரிவால் முன்வைத்துள்ளார்.
இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியில் சட்டம் ஒழுங்கு மோசமாகி வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டெல்லியில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள், கொலை, கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. டெல்லியில் கும்பல் சண்டைகள் காணப்படுகின்றன. இன்று டெல்லி உலகிலேயே மிகவும் பாதுகாப்பற்ற தலைநகரமாக மாறி வருகிறது என மக்கள் கூறுகிறார்கள்.” என்று மாநிலத்தின் சட்ட ஒழுங்கு பற்றி ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.