காங்கிரஸ் vs ஆம் ஆத்மி : பரபரக்கும் டெல்லி அரசியல் களம்! இரு அணிகளாக பிரிந்த இந்தியா கூட்டணி?
டெல்லி மாநில தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தனித்து களம் காணும் சூழலில் உள்ளது.
டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு கடந்த 2015 முதல் தொடர்ந்து 2 சட்டப்பேரவை தேர்தல்களிலும் வென்று அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.
டெல்லி அரசியல் மாற்றங்கள்…
கடந்த சில மாதங்களாக டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை வழக்கில் கைது, பிறகு ஜாமீன் , முதலமைச்சர் பதவி ராஜினாமா என டெல்லி அரசியல் களம் அனல்பறந்தது. தனது பதவியை ராஜினாமா செய்த கெஜ்ரிவால் மீண்டும் மக்கள் தீர்ப்புக்கு பிறகே ஆட்சி அரியணையில் ஏறுவேன் என சபதமிட்டுள்ளார். தற்போது டெல்லி மாநில முதல்வராக ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி பொறுப்பில் உள்ளார்.
பிரிந்த I.N.D.I.A கூட்டணி :
நாடளுமன்ற தேர்தல்சமயத்தில் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி என காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஒன்றாக களம் இறங்கின. அப்போதைய தேர்தலிலேயே டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் தனித்தும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் – காங்கிரஸ் தனித்தும், அண்டை மாநிலமான கேரளாவிலும் கூட கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் தனித்து தான் போட்டியிட்டன.
ஆம் ஆத்மி – பாஜக – காங்கிரஸ் :
தற்போதைய டெல்லி அரசியல் சூழலில் ஆளும் ஆம் ஆத்மிக்கு எதிராக பலமான மாநில எதிர்க்கட்சியாக இருப்பது பாஜக தான். இப்படி இருக்கும் சூழலில், ஆம் ஆத்மி , பாஜக , காங்கிரஸ் என மும்முனை போட்டி அங்கு நிலவுகிறது. இதில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பெரும்பாலான ஆதரவு ஆம் ஆத்மி பக்கமே செல்கிறது. காரணம் டெல்லி அரசியல் களத்தில் பாஜகவை வீழ்த்தும் அதிகாரத்தில் ஆம் ஆத்மி கை காங்கிரசை விட சற்று ஓங்கி இருக்கிறது.
இதனால், பெரும்பாலான இந்தியா கூட்டணி கட்சிகள் ஆம் ஆத்மிக்கே தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். ஒரு காலத்தில் டெல்லியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த காங்கிரஸ் தற்போது தனித்து அதன் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் வெற்றி ஒட்டுமொத்த இந்தியா கூட்டணிக்கும் காங்கிரஸ் தங்களை சுய பரிசோதனை செய்யும் தேவையான வெற்றியாக பார்க்கப்படுகிறது.
ஆம் ஆத்மிக்கு ஆதரவு :
ஏற்கனவே, ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் மம்தாவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். அதேபோல, இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சியும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்காக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (UBT) அணி தலைவர் உத்தவ் தாக்கரேவும் டெல்லியில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இந்தியா கூட்டணியில் இருந்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளார். RJD மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான் பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் RJD காங்கிரஸ் கட்சி பக்கம் நிற்கிறது என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.