கெஜ்ரிவால் வீட்டில் நடந்தது என்ன.? ஆம் ஆத்மி விளக்கமும்.. ஸ்வாதி மாலிவால் பதிலும்…
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது.
கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் (வியாழன்) வழக்கு பதியப்பட்டது. ஸ்வாதி மாலிவால், டெல்லி காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக நேற்று மாஜிஸ்ரேட் முன் ஆஜராகி சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று ஆம் ஆத்மி கட்சி சார்பாக டெல்லி மாநில அமைச்சர் அதிஷி விளக்கம் அளித்தார். அதில், ஸ்வாதி மாலிவால் சம்பவத்திற்கு பின், பாஜக சதி செய்து வருகிறது. திட்டமிட்டு ஸ்வாதியை கெஜ்ரிவால் வீட்டிற்கு அனுப்பியுள்ளது. கெஜ்ரிவால் மீது பொய் வழக்கு பதியவைப்பதே இந்த சதியின் நோக்கம். சதியின் முகமாக ஸ்வாதி இருக்கிறார். முதல்வர் மீது குற்றச்சாட்டை சுமத்துவதே அவரது நோக்கம்.
அந்த புகாரில் ஸ்வாதி. கொடூரமாக தாக்கபட்டதாக கூறுகிறார். அதிகம் காயமடைந்ததாகவும், பிறகு வலியால் துடித்ததாகவும், உடைகள் கிழிந்ததாகவும் கூறுகிறார். ஆனால், வெளியான வீடியோவில் அவர்தான் காவலாளியை மிரட்டுவது போல் இருக்கிறது. ஸ்வாதியின் குற்றச்சாட்டு தவறானவை. தாக்குதல் பற்றிய பேச்சு உண்மை இல்லை என்று அதிஷி விளக்கம் அளித்தார்.
இது குறித்து டிவிட்டரில் பதிவு செய்த ஸ்வாதி மாலிவால், நேற்று முன்தினம் கூட நான் கூறிய அனைத்து உண்மைகளும் முழுதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பழைய கதைக்கே கட்சி திரும்பி உள்ளது. சில குண்டர்கள்தான் ஆம் ஆத்மி கட்சியை அச்சுறுத்தி வருகின்றனர். ஒருவேளை நான் கைது செய்யப்பட்டால், அனைத்து ரகசியங்களையும் வெளியிடுவேன். நாட்டில் உள்ள பெண்களுக்காக நான் தனியாக போராடி வருகிறேன். எனக்காகவும் போராடுவேன். நேரம் வரும்போது முழு உண்மையும் வெளியே வரும் அதிஷி கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.