நாடாளுமன்றத்தில் ஆதார் திருத்த சட்ட மசோதா இன்று தாக்கல்….!!
ஆதார் சட்ட விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிப்பதற்கான புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
ஆதார் ஆணையத்துக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில், புதிய திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. அதன்படி, ஆதார் சட்ட விதிகள், ஒழுங்குமுறைகள், உத்தரவுகள் ஆகியவற்றை மீறும் நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
அனுமதியின்றி, மத்திய அடையாள தகவல் தொகுப்பகத்தை பயன்படுத்துதல், தகவல்களை அழித்தல் போன்றவற்றுக்கான சிறைத்தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் அவசியம். ஆதார் இல்லாததற்காக, எந்த குழந்தைக்கும் சலுகைகள் மறுக்கப்படாது. புதிய செல்போன் சிம்கார்டு பெறவும், வங்கி கணக்கு தொடங்கவும் விருப்பத்தின் பேரில் ஆதார் எண் அளிக்கலாம் போன்ற திருத்தங்கள் ஆதார் மசோதாவில் செய்யப்பட்டுள்ளன. இந்த திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.