300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு.!

மத்தியப் பிரதேசத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு.
மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் ஜூன் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை கிட்டத்தட்ட 50 மணி நேரத்திற்குப் பிறகு நேற்று மீட்கப்பட்டது.
ஆனால், துரதிர்ஷ்டவசமா 50 மணி நேரம் போராட்டத்திற்கு பின் மயக்க நிலையில், மீட்கப்பட்ட ஸ்ரீஷ்டி குஷ்வாஹா என்ற அந்த குழந்தை, செஹோர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
முதலில் 40 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட சிறுமி, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இயந்திரங்களால் ஏற்பட்ட அதிர்வுகளால் மேலும் 100 அடிக்கு கீழே நழுவிவிட்டதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
எல்லா முயற்சிகளையும் செய்தும் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று செஹோர் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் திவாரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விவசாய நிலத்தின் உரிமையாளர் மற்றும் ஆழ்துளை கிணற்றுக்கு பொறுப்பான நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக செஹோர் எஸ்பி மாயக் அவஸ்தி தகவல் தெரிவித்துள்ளார்.