ஹிமாச்சல பிரதேசத்தில் பைக் மீது டிரக் மோதி விபத்து..! இருவர் உயிரிழப்பு..!
ஹிமாச்சலப்பிரதேசத்தில் பைக் மீது டிரக் மோதியதில் தாய் மற்றும் மகன் உயிரிழந்தனர்.
ஹிமாச்சலப்பிரதேசம் உனா மாவட்டத்தின் பங்கன பகுதியில் பைக் மீது டிரக் மோதியதில் ஒரு பெண் மற்றும் அவரது ஆறு வயது மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தம்பதிகள் தனது ஆறு வயது மகனுடன் ஹமிர்பூரில் உள்ள பாபா பாலக் நாத் கோவிலில் பிராத்தனை செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பெண்ணும் அவரது குழந்தையும் சாலையில் விழுந்துள்ளனர்.
அந்த நேரத்தில் பங்கனாவில் இருந்து வேகமாக வந்த டிரக் தாய் மற்றும் அவரது மகன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெண்ணின் கணவர் சாலையின் மறுபுறம் விழுந்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பெண்ணின் கணவர் உனாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவின் பாபோர் கிராமத்தில் வசிக்கும் ஸ்வர்ணா கவுர் மற்றும் அவரது மகன் வன்ஷ்ப்ரீத் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய டிரக் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.