நாளை தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்.., மொத்தம் 16 மசோதாக்கள் தாக்கல்!
நாளை நாடாளுமன்றத்தில் தொடங்கும் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட் உடன் சேர்த்து மொத்தம் 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
டெல்லி : நாளை (ஜனவரி 31) டெல்லி நாடாளுமன்றத்தில் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. நாளை முதல் பிப்ரவரி 13 வரையில் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது . அதன் பிறகு மார்ச் 10ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் வரையில் இந்த கூட்டத்தொடர் நடைபெறஉள்ளது .
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைவரும் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட் 2025 மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். அந்த பட்ஜெட் மசோதாவையும் சேர்த்து மொத்தம் 16 சட்ட மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
அதில் மிக முக்கிய மசோதா, வக்பு சட்ட திருத்தம் ஆகும். ஏற்கனவே உள்ள முசல்மான் வக்பு சட்டத்தை திருத்தி புதிய வக்பு சட்ட திருத்தத்தை மத்தியபாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளது. இஸ்லாமியர்களின் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடங்களை அரசே நிர்வகிக்கும் வண்ணம் இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த சட்டத்திருத்தம் அமலாகும் போது நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து, ரயில்வே திருத்த சட்ட மசோதா, வங்கி சட்டம் திருத்தம் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
மேலும் சில மசோதாக்களின் விவரம் இதோ..,
- பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, 2024
- எண்ணெய் வயல்களின் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, 2024
- கொதிகலன்கள் (பாய்லர்) மசோதா, 2024
- கோவா மாநிலத்தின் சட்டமன்றத் தொகுதிகளில் பட்டியலின பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைக்கும் மசோதா தாக்கல்.
- ஏற்றுமதி சட்டத்திருத்தம் 2024
- கடல் மூலம் பொருட்களை எடுத்துச் செல்லும் மசோதா, 2024
- கடலோர கப்பல் மசோதா, 2024
- வணிகக் கப்பல் மசோதா, 2024
- நிதி மசோதா, 2025
- விமானப் பொருள்களில் ஆர்வங்களைப் பாதுகாத்தல் மசோதா, 2025
- “திரிபுவன்” சஹ்காரி பல்கலைக்கழக மசோதா, 2025
- குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் மசோதா, 2025