மணிப்பூர் முதல்வர் பங்களா அருகே பயங்கர தீ விபத்து.! மீண்டும் கலவரமா?
மணிப்பூர் : தலைநகர் இம்பாலில் அம்மாநிலத் தலைமைச் செயலக கட்டடம், முதல்வர் பிரேன்சிங்கின் பங்களா ஆகியவை உள்ளன. இந்த நிலையில், முதல்வர் பங்களா அருகே அங்கிருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ள கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலின்பேரில் சென்ற தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தினர்.
தற்போது அங்கு யாரும் வசிக்கவில்லை என்று கூறியுள்ள காவல்துறை, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. தீ விபத்துக்குள்ளான வீடு கோவாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் மறைந்த தங்கோபாவ் கிப்கெனுக்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது.
மணிப்பூரில் குக்கி, மெய்தி இன மக்களிடையே ஓயாத மோதல்கள் காரணமாக இன்னும் அங்கு பதற்றம் நீங்காமல் உள்ளது. தினம் தினம் ஒரு கலவரம் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், மணிப்பூர் முதல்வர் பங்களா அருகே தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இம்பாலின் பாபுபராவில் உள்ள மணிப்பூர் முதல்வரின் இல்லத்திற்கு எதிரே உள்ள குக்கி விடுதி வளாகத்தை ஒட்டி இந்த வீடு அமைந்துள்ளது. அண்மையில், அங்கு நிலவிய கலவரம் காரணமாக, குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.
இதனால், தீ விபத்து சம்பவத்தின் போது, உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. வீடு ஒரு வருடத்திற்கும் மேலாக கைவிடப்பட்டதால், தீயை அணைப்பது மற்றும் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்ததாகவும், தீ பரவியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.