அண்ணனுக்கு ராக்கி கட்ட பேருந்தில் பயணித்த கர்ப்பிணி.. பிரசவம் பார்த்த நடத்துனர், செவிலியர்.!
தெலங்கானா : அண்ணனுக்கு ராக்கி கட்ட செல்லும் வழியில், கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், நடத்துனர் மற்றும் பேருந்தில் பயணித்த செவிலியர் இணைந்து பிரசவம் பார்த்தனர்.
தெலங்கானா மாநிலம் கட்வால் – வனபர்த்தி வழித்தடத்தில் அரசுப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகளில் நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென வலி ஏற்பட்டது. இதையறிந்த பாரதி என்ற கண்டக்டர், கர்ப்பிணிப் பயணியின் நிலை குறித்து டிரைவர் மற்றும் பயணிகளிடம் எச்சரித்து உடனடியாக உதவி கேட்டார்.
அருகில் மருத்துவமனை ஏதும் இல்லாத காரணத்தினால், சக பயணிகளும் பேருந்தை நிறுத்துமாறு சொன்னதும் உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது. அப்பொழுது பேருந்தில் பயணித்த ஒரு செவிலியர், கண்டக்டர் பாரதியுடன் இணைந்து கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். சந்தியா என்ற அந்த ககர்ப்பிணிக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது.
இதனை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தாய் மற்றும் பிறந்த குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிய வந்தது. ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு, தனது சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக பேருந்தில் சென்ற போது இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தற்பொழுது, சரியான நேரத்தில் பேருந்தை உடனடியாக நிறுத்தி இரு உயிர்களை காப்பாற்ற உதவிய பேருந்து நடத்துனர் பாரதியின் மன உறுதியையும், செவிலியரின் உதவி செய்யும் மனப்பான்மைக்கும் பயணிகளை மற்றும் இல்லாமல் இணைய வாசிகளும் பாராட்டி வருகின்றனர்.