திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட்.? அடுத்த அதிர்ச்சி சம்பவம்…
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாத லட்டுவின் உள்ளே குட்கா பாக்கெட் இருந்ததாக தெலுங்கானாவை சேர்ந்த பத்மா என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தெலுங்கானா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்புகள் இருந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்த குற்றசாட்டை அடுத்து மாநில அரசின் ஆய்வு குழு நடத்திய சோதனையில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாடு மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு , மீன் எண்ணெய் இருப்பது தெரியவந்தது.
இப்படியாக அதிர்ச்சி குற்றச்சாட்டுகளும், அடுத்தடுத்த நடவடிக்கைகள், திருப்பதி கோயிலில், தோஷ நிவாரண சாந்தி யாகம் உள்ளிட்டவை நடந்து வருகிறது. இப்படியான சூழலில் தற்போது திருப்பதி லட்டுவில் குட்கா போதைப்பொருள் பாக்கெட் இருந்தது அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், கம்மம் ரூரல் மண்டலம் கொல்லகுடேம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மா. இவர் மாதந்தோறும், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்வது வழக்கம். இம்மாதம் கடந்த 19ஆம் தேதி தனது உறவினர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பத்மா சென்றுள்ளார்.
கடந்த 20ஆம் தேதி திருப்பதியில் லட்டு பிரசாதத்தை வாங்கி கொண்டு ஊருக்கு சென்றார். அங்கு மற்றவர்களுக்கு பிரசாத லட்டை கொடுப்பதற்காக அதனை பிரித்து பார்த்த போது அதனுள்ளே குட்கா எனும் போதைப்பொருள் பாக்கெட் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பத்மா மற்றும் அவரது மகன் இதனை புகைப்படமாக எடுத்து இணையத்தில் வெளியிட்டு, இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.