பிரதமர் மோடியை பேச வைப்பதற்காக தான் நம்பிக்கை இல்லா தீர்மானமா.? எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்ன.?
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும், பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானமானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் மக்களவை எம்பி கவுரவ் கோகோய் , திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகளை சேர்ந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆதரவுடன் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம் :
நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது, அரசின் மீதோ, ஒரு நபரின் மீதோ குற்றசாட்டை முன் வைத்து அதன் மீதான வாக்கெடுப்பை நடத்தி முடிவு எட்டப்படுவது ஆகும். இதனை நாடாளுமன்றத்தில் மக்களவையில் மக்களவை எம்பி மட்டுமே நிறைவேற்ற முடியும். ஏனென்றால் மக்களவை தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
விவாதம் :
நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது குறைந்தது 50 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். அப்போது தான் அந்த தீர்மானம் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்படும். மக்களவை விதிமுறை பிரிவு 198ன்கீழ், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் பட்சத்தில் அந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும். அதன் பிறகு அந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அந்த வாக்கெடுப்பில் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக அதிக வாக்கு கிடைக்கப்பெற்றால் அரசு பதவி விலக வேண்டும்.
10 நாள் அவகாசம் :
நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செயப்பட்டு, அதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் அடுத்த 10 நாட்களுக்குள் விவாதம் நடத்தி, வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தேதி பின்னர் அறிவிக்கப்படும் :
மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் பேச வேண்டும் என கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விரைவில் விவாதம் நடக்கும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகாலத் ஜோஷி தெரிவித்திருந்தார். காங்கிரஸ் சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு ஏற்பதாகவும், விவாதத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையில் அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் திட்டம்.?
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றால் மத்திய அமைச்சரவை தலைவர் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைய வாய்ப்பில்லை என்றாலும் பிரதமர் பேசுவார் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டவந்துள்ளனர். இந்த நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் மணிப்பூர் தொடர்பான கேள்விகளையும் எதிர்க்கட்சிகள் முன்வைக்க திட்டமிட்டுள்ளது.