நடுத்தர மக்களுக்கு புதிய குடியிருப்பு திட்டம்! பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்!
மத்திய அரசின் 2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த இடைக்கால பட்ஜெட்டில், விவசாயம், மருத்துவம், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து மக்களவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதன்பின் பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். அவர் கூறியதாவது, இடைக்கால பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சிக்கான பட்ஜெட். பெண்கள், ஏழைகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து சமூக மக்களையும் உள்ளடக்கிய பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் வலியுறுத்துகிறது என கூறியிருந்தார்.
இந்த நிலையில், மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இது தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட். இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை நோக்கி தாக்கல் செய்யப்பட்டது. சரியான நோக்கங்கள், சரியான கொள்கைகள் மற்றும் சரியான முடிவுகளுடன் பொருளாதாரத்தை நாங்கள் நிர்வகித்துள்ளோம்.
ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் பட்ஜெட் இது… பிரதமர் மோடி உரை!
கடந்த 10 ஆண்டுகளின் பொருளாதார செயல்பாடு குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். கடந்த நிதியாண்டில் 5.9% இருந்த நிதிப்பற்றாக்குறை நடப்பு ஆண்டில் 5.5% ஆக குறைந்துள்ளது. 2024-25ம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 5.1% ஆக கட்டுப்படுத்தப்படும். நிதிப்பற்றாக்குறை படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு 4.5% என்ற இலக்கு எட்டப்படும். 4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இதுவரை 2 கோடி வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. மேலும், 3 கோடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஜார்கண்ட், பீகார், ஒடிசா உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து கவனிக்கப்படும் என்றும் நடுத்தர மக்களுக்கு புதிய குடியிருப்பு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.