இன்று டெல்லியில் அவசரமாக கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம்!
தமிழ்நாடு மற்றும் கர்நாடக இடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை அதிகரித்துக்கொண்டு இருக்கும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சுழலில், இன்று டெல்லியில் அவசரமாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கூடுகிறது. இதனால் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. கடந்த சில நாட்களாக காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டங்களில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், இருதரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டது. இதன்பின், காவிரி ஒழுங்காற்று குழு அதிகாரிகள் தமிழகத்திற்கு காவிரியில் அடுத்த 18 நாட்களுக்கு நாள்தோறும் வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். ஆனால், போதுமான நீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்தது.
ஏற்கனவே, இதுபோன்று தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அப்போது, கர்நாடக அரசு தரப்பில் மறுப்பு தெரிவித்தனர். இதனால், இரு மாநிலங்களும் சட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், தமிழக அரசு தொடர்ந்து, எங்களுக்கு உரிய நீரை வழங்க வேண்டும் என்று சட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த சமயத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இந்த பரபரப்பான சூழலில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறும் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற உத்தரவிடுமாறு தமிழக அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்று கர்நாடக அரசும் தங்களது நிலை குறித்து தண்ணீர் திறப்பு குறித்தும் வாதங்களை முன்வைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, இன்றைய கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறும். கூட்டத்துக்கு பிறகு தண்ணீர் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.