வீட்டுக்கு வந்த பார்சலில் ஆண் சடலம் – பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி.!
மின் சாதனங்களுக்கு பதிலாக பார்சலில் ஆணின் சடலத்தை பெண் ஒருவர் கண்டெடுத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த பார்சலில், பாதி வெட்டப்பட்ட அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார், அவரது குடும்பத்தினரும் அச்சமடைந்தனர்.
அதுமட்டும் இல்லாமல் பார்சலுடன் ஒரு கடிதம் வர, அதில் ‘ரூ.1.30 கோடி கொடுக்க வேண்டுமெனவும், இல்லையேல் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்’ எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வீடு கட்டும் பணிக்காக மின்விளக்குகள், மின்விசிறிகள், சுவிட்சுகள் போன்றவை வழங்கப்படும் என துளசிக்கு வாட்ஸ்அப்பில் செய்தி வந்துள்ளது.
சில மணி நேரம் கழித்து அடையாளம் தெரியாத ஒருவர், துளசி வீட்டு வாசலில் ஒரு பெட்டியை வைத்து விட்டு அதில் மின் சாதனங்கள் இருப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர், துளசி பார்சலை திறந்து பார்த்தபோது, அதில் ஒருவரின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இது 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் என தெரிவித்துள்ளனர். அந்த நபர் 4-5 நாட்களுக்கு முன்பு இறந்து இருக்கலாம் என போலீசார் கணித்துள்ளனர்.
பின்னர், போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அந்த நபர் கொலை செய்யப்பட்டாரா இல்லையா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து அம்மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.