அதிர்ச்சி..!கருப்பு,வெள்ளை பூஞ்சை தொற்றுகளைத் தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை ..!
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மஞ்சள் பூஞ்சை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கருப்பு,வெள்ளை பூஞ்சை தொற்றுகளைத் தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை பரவுவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு ‘மியூகோர்மைகோசிஸ்’ என்ற கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. அதாவது,கொரோனா நோயாளிகளுக்கு ‘ஸ்டீராய்டு’ மருந்துகள் அதிக அளவில் செலுத்தப்படுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறது.
இந்த தொற்றானது மூளை மற்றும் நுரையீரலை பாதிக்கச் செய்கிறது. மேலும்,இத்தொற்று ஏற்பட்டால் முகம், கண் கீழ்ப்பகுதியில் வலி, வீக்கம், மூக்கடைப்பு, கண் மங்குதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். எனினும்,இது குணப்படுத்திவிடக்கூடிய நோய் தான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில்,இதுவரை 8,848 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.
இதற்கிடையில்,பீகாரின் பாட்னாவில் பிரபல மருத்துவர் உட்பட நால்வருக்கு வெள்ளை பூஞ்சை தொற்று பாதிப்பு உறுதியானது.இது நுரையீரல் மட்டுமின்றி சிறுநீரகம்,மூளை,நகங்கள், தோல் போன்றவைகளை பாதிக்கிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு மஞ்சள் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த தொற்றானது கருப்பு,வெள்ளப் பூஞ்சை தொற்றுகளை விடவும் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவிலிருந்து இன்னும் முழுவதுமாக மீள முடியாத நிலையில்,கருப்பு,வெள்ளை பூஞ்சை தொற்றுகளைத் தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை பரவுவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.