குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம்…, தமிழக மீனவர்களுக்கு ஒரு நியாயமா …? மதுரை எம்.பி சு.வெங்கடேசன்!
குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம்…, தமிழக மீனவர்களுக்கு ஒரு நியாயமா என எம்.பி சு.வெங்கடேசன் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து மக்களவையில் மதுரை எம்பி சு வெங்கடேசன் அவர்கள் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக குஜராத் மாநிலத்தின் துவாரகா மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்கப்பட்டதற்கு மத்திய அரசு உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்தது.
அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரிகளை அழைத்து நேரடியாகவும் தனது கண்டனத்தை மத்திய அரசு பதிவு செய்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பலர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். இது சம்பந்தமாக தமிழக முதல்வர் மத்திய அரசின் தலையீட்டை கோரி கடிதம் எழுதி இருக்கிறார்.
ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த தலையீடும் செய்யவில்லை. மேலும் இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரிகளை அழைத்து எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம் தமிழக மீனவர்களுக்கு வேறு ஒரு நியாயமா? தமிழக மீனவர்கள் மீன்பிடி உரிமையை முழுமையாக உறுதிப்படுத்த வேண்டுமெனவும், இலங்கை கடற்படையினருடைய தாக்குதலுக்கு மத்திய அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.