இந்து கோவில் வளாக கண்காட்சியில் முஸ்லீம்கள் கடை வைக்க தடை.? இரண்டாவது ஆண்டாக தொடர்ந்த சம்பவம்.!
கர்நாடக மாநிலத்தில், தட்சிண கன்னடா மாவட்டத்தில் முல்கியில் ஒரு இந்து கோவில் வளாக கண்காட்சியில் இஸ்லாமியர்கள் கடை வைக்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் முல்கியில் உள்ள பப்பநாட்டில் துர்கா பரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் கோவில் வளாகத்தில் கண்காட்சி வைக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு ஏப்ரல் 5இல் இந்த கண்காட்சி துவங்கியது. ஏப்ரல் 12வரையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.
அனுமதி இல்லை :
இந்த கண்காட்சியில், இந்தாண்டு இஸ்லாமிய வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை என துர்கா பரமேஸ்வரி கோவில் கமிட்டி அறிவித்துள்ளது. இந்த தடை கடந்தாண்டும் இருந்தது என தகவல் தெரியவந்துள்ளது. உள்ளூர் மக்கள், கோவில் வளாக கண்காட்சியில் இந்துக்கள் அல்லாதோரை அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.
வியாபாரின் நம்பிக்கை :
ஒரு இஸ்லாமிய வியாபாரி கூறுகையில், கடந்த ஆண்டு தடைக்கு முன், கடந்த 35 ஆண்டுகளாக நகைகள் மற்றும் இதர ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்யும் கடையை கண்காட்சியில் வைத்தேன். கோவில் கமிட்டி தனது முடிவை மறுபரிசீலனை செய்து அனைவரையும் மீண்டும் கண்காட்சிக்குள் வியாபாரம் செய்ய அனுமதிக்கும் என்று நான் நம்புகிறேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.
கோவில் வரலாறு :
இந்த கோவில் உருவான வரலாற்று கூற்றுப்படி, முஸ்லீம் வணிகர் பாப்பா பேரியின் படகு சாம்பவி ஆற்றில் கரை ஒதுங்கியதாகவும், அங்கு துர்கா தேவி அம்மன் தனக்கு ஒரு கோவில் கட்டும்படி அறிவுறுத்தியதாகவும், அதன் பெயரில் கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.