12 ரூபாய் அதிகம் வசூலித்த தியேட்டருக்கு ரூ.13 லட்சம் அபராதம்..!
ஹைதராபாத்தில் வாடிக்கையாளர்களிடம் ரூ.12 அதிகமாக வசூலித்த திரையரங்கிற்கு ரூ.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் இரண்டு பார்வையாளர்களிடமிருந்து ஒரு டிக்கெட்டிற்கு ரூ.11.74 கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு டிக்கெட்டுக்கான அதிகப்படியான தொகையை இருவருக்கும் 18 சதவீத வட்டியுடன் திருப்பித் தருமாறும், மேலும் ரூ.13 லட்சத்தை அரசின் நுகர்வோர் நல நிதிக்கு செலுத்த வேண்டும் என்றும் திரையரங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத்தின் சைதன்யபுரி மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஷாலினி ஷிவானி திரையரங்கத்தில் திரைப்படம் பார்க்க சென்ற இருவரிடம் ஒரு டிக்கெட்டிற்கு ரூ.11.74 வசூலிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் இருவரும் நுழைவுக் கட்டணத்தின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டதால் அதிக கட்டணம் வசூலித்ததாக தேசிய லாப எதிர்ப்பு ஆணையத்தில் (NAA) புகாரளித்தனர்.
இதனையடுத்து புகார்தாரர்கள் இருவரிடமிருந்து வசூலிக்கப்பட்ட அதிகபட்சத் தொகையை 18 சதவீத வட்டியுடன் துருக்கி தருமாறும், சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) குறைக்காததற்காக, அரசின் நுகர்வோர் நல நிதிக்கு ரூ.12.87 லட்சம் செலுத்துமாறு திரையரங்கை நடத்தும் மிராஜ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு என்ஏஏ (NAA) உத்தரவிட்டுள்ளது.