காய்ச்சலுக்கு விபரீத வைத்தியம்.! பச்சிளம் குழந்தையை 51 முறை ஊசியால் குத்தியதால் உயிர்போன சோகம்.!
பழங்கால வைத்திய முறையால் மூன்று மாத குழந்தை இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று மாத குழந்தைக்கு சிகிச்சை அளிக்க சூடான குண்டூசியால் 51 முறை முத்திரை குத்தியதால் குழந்தை உயிரிழந்தது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஷாதோல் மாவட்டத்தில் மூன்று மாத பெண் குழந்தை நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தையை அவரது குடும்ப உறுப்பினர்கள் பாரம்பரிய மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்காக அழைத்துச் சென்றனர்.
ஆனால் குழந்தையின் தாய் ரோஷ்னி கோல் இதனை எதிர்த்தார். பாரம்பரிய வைத்தியர், சூடான குண்டூசிகளால் குழந்தையை 51 முறை முத்திரை குத்தி சிகிச்சை செய்துள்ளார். இருப்பினும் குழந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் இல்லாததால் ஷாதோல் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவக் கல்லூரியில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
குழந்தை இறந்த பிறகு, ரோஷ்னி காவல்துறையை அணுகி, அவரது குடும்பத்தினர் மற்றும் பாரம்பரிய மருத்துவர் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், ஷாதோல் காவல் நிலைய போலீஸார் வைத்தியர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.