தற்காலிக மருத்துவமனைகள்.., நடமாடும் பிணவறைகள்.! கேரள அமைச்சர் முக்கிய ஆலோசனை.!
வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 பெரிய நிலச்சரிவுகள் அம்மாநிலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரையில் 60ஐ கடந்துள்ளது. மேலும், மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிலச்சரிவில் சாலைகள் , பாலங்கள் மூழ்கியதால் பல்வேறு இடங்களில் மீட்புப்பணிகள் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றன. மீட்பு பணிகளில் கேரள மீட்புப்படையினர் மட்டுமல்லாது, தேசிய மீட்புப்படையினர், இந்திய ராணுவத்தினர் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்தும் மீட்பு படையினர் கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.
இப்படியான சூழலில், மீட்புப்பணிகளில் சுகாதாரத்துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் தற்போதைய மீட்புப்பணிகள் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
அதில், தற்போதைய நிலைமை பற்றிய விரிவான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மருத்துவமனை வசதிகள் பற்றி துல்லியமாக கண்காணிக்க அறிவுறுத்தினார். தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக மருத்துவமனைகளை அமைக்கவும் பரிந்துரை செய்தார்.
மேலும், நடமாடும் பிணவறைகளின் பயன்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தினார். தற்போதுள்ள மருத்துவமனைகளில் செயல்பாட்டில் உள்ள பிணவறை அமைப்புகளை மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவுவதற்காக 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார் மதிப்பாய்வு செய்தார்.