மக்கள் களத்தில் வாகை சூடிய வினேஷ் போகத்.! வெற்றி., நிராகரிப்பு., சாதனை.!
ஒலிம்பிக் பதக்க கனவு நிஜமாகாவிட்டாலும் தேர்தல் களத்தில் மக்கள் ஆதரவுடன் வெற்றி வாகை சூடியுள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத்.
டெல்லி : போராட்ட களத்திலும், ஒலிம்பிக் மல்யுத்த களத்திலும் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு இதற்கு மேல் போராட தெம்பில்லை எனக் கூறினாலும், மக்கள் ஆதரவுடன் மக்களுக்கான பிரதிநிதியாக தலைநிமிர்ந்து புதுத் தெம்புடன் போராடி வென்றுள்ளார் காங்கிரஸ் கட்சியின் புதிய சட்டமன்ற உறுப்பினர் வினேஷ் போகத்.
நடந்து முடிந்த ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி, 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை தகர்த்து மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால் அதனை பொய்யாக்கும் வண்ணம் பாஜக 3வது முறையாக ஹரியானாவில் ஆட்சியை பிடித்துள்ளது. இருந்தாலும், அங்கு வாகை சூடிய காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத்தின் வெற்றி இந்தியா முழுக்க பேசுபொருளாக மாறியிருக்கிறது.
வினேஷ் போகத் ஓய்வு :
கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட வீராங்கனை வினேஷ் போகத், இறுதி போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுப்பார் என்றிருந்த நிலையில், 100 கிராம் எடை கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்தியாவுக்கு தங்கம் வென்று தருவார் என்ற பலரும் எதிர்நோக்க, எனக்கு இதற்கு மேல் போராட சக்தியில்லை என்று தனது மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் வினேஷ் போகத்.
காங்கிரஸில் வினேஷ் போகத் :
அதன் பிறகு தனது அடுத்த களத்தை உடனடியாக தேர்வு செய்தார் வினேஷ் போகத். ஒலிம்பிக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட அடுத்த ஒரே மாதத்தில் செப்டம்பர் 6ஆம் தேதி ராகுல் காந்தியை சந்தித்து தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார் வினேஷ் போகத். மேலும், வினேஷ் போகத்துடன் பல்வேறு போராட்ட களத்தில் துணையாக நின்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் தன்னை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார்.
காங்கிரஸ் வேட்பாளராக…
வினேஷ் போகத் காங்கிரஸில் இணைவதற்காகவே காத்துக்கொண்டிருந்தது போல, அவர் இணைந்த பின்னர் தான் ஹரியானா காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மிக குறுகிய காலத்தில், உட்கட்சியினர் பலரது எதிர்ப்புகளையும் மீறி வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் களமிறங்கினார். ஜூலானா தொகுதியில் இறுதியாக 2005ஆம் ஆண்டு தான் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. 19ஆண்டுகளாக காங்கிரஸ் அந்த தொகுதியில் வெற்றிபெறவில்லை.
வெற்றி வாகை சூடிய வினேஷ் :
மல்யுத்த களத்தை போல, தேர்தல் களத்திலும் தடைகளை சந்தித்தார் வினேஷ் போகத். கடந்த 2019இல் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற மொத்த வாக்கு 12 ஆயிரம் தான். ஆனால் , இந்த முறை வினேஷ் போகத் பெற்ற வாக்குகள் 65,080 ஆகும். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை விட சுமார் 6 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார் வினேஷ் போகத்.
இளம் வயது :
மக்கள் மன்றத்தில் வெற்றி வாகை சூடிய வினேஷ் போகத்தின் பாதை என்பது அவ்வளவு எளிதாக அமையவில்லை. பேருந்து நடத்துனராக பணியாற்றிய தந்தை ஒருமுறை சிறு வயது வினேஷ் போகத்திடம், ” நீ வானில் பறக்க வேண்டும். அதனை நான் பேருந்தில் இருந்து பார்க்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார். தந்தையின் வார்த்தையின் அர்த்தம் புரிவதற்குள், வினேஷ் போகத்தின் 9வது வயதில் தந்தை உயிரிழந்தார். அதன் பிறகு சில மாதங்களில் தாயாருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இளம் வயது முதல் தாய்மாமா கவனிப்பில் வளர்ந்தார் வினேஷ் போகத்.
நிறைவேறா ஒலிம்பிக் கனவு :
19 வயதிலேயே பல்வேறு சர்வதேச போட்டிகளில் களம் கண்டு பதக்க வேட்டையாடிவிட்டார் வினேஷ் போகத். காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வினேஷ் போகத் 3 முறை ஒலிம்பிக் சென்றுள்ளார் . மற்ற பதக்கங்களை வென்ற வினேஷ் போகத்திற்கு எனோ ஒலிம்பிக் பதக்க கனவு என்பது கனவாகவே சென்றுவிட்டது.
போராட்ட களத்தில்..,
மல்யுத்த களத்தில் இருந்து கொண்டே, ஹரியானா விவசாய போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தார் வினேஷ் போகத். அதன் பிறகு, பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து போராடிய மலியுத்த வீரர்களில் முதல் வரிசையில் அமர்ந்து வலுவாக எதிர்ப்புக் குரல் எழுப்பியவர் வினேஷ் போகத்.
ஆளும் கட்சியான பாஜக எம்பிக்கு எதிராக வினேஷ் போகத் போராடியதால், ஒலிம்பிக் போட்டியில் இவர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததும், மல்யுத்த வீரர்களின் போராட்டமும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.
தடைக்கற்கள்., படிக்கற்களாக..,
குடும்ப சூழ்நிலை, மல்யுத்த களம் , போராட்ட களம் என அத்தனை தடைகளையம் மீறி மக்கள் மீது நம்பிக்கை வைத்து பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி, ஒரு அரசியல் கட்சியில் இணைந்து தேர்தலில் களம் கண்டார. தற்போது மக்கள் அளித்த தீர்ப்பில் வென்று காட்டியுள்ளார் வினேஷ் போகத். தடைகளை படிக்கற்களாக மாற்றி முன்னேற துடிக்கும் பலரது கனவுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார் வினேஷ் போகத்.