பீகாரில் 15 நாளில் 10வது பாலம் இடிந்து விழுந்தது.!
பீகார்: சரண் மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் குறுக்கே பயன்பாட்டில் இருந்த ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
பீகார் மாநிலத்தில் சமீப நாட்களாக பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாகி வருகிறது. இதுவரை கடந்த 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்ததாக வெளியாகும் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டாலும், மாநிலத்தில் உள்ள கட்டடங்களின் தரம் மீதான கேள்விகள் வலுவாக எழுப்பப்படுகிறது.
ஏற்கனவே, நேற்று சரண் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழைமையான ஒரு பாலம் இடிந்து விழுந்த நிலையில், தற்போது அதே மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் குறுக்கே 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
கண்டகி ஆற்றின் குறுக்கே, சரய்யா மற்றும் சதுவா எனும் கிராமங்களை இணைக்கும்படியாக கட்டப்பட்டு இருந்த பாலம் இடிந்து விழுந்ததால் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் குறிப்பிட்ட கிராமங்களை போக்குவரத்து ரீதியில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளது.
மாவட்ட மூத்த அரசு அதிகாரி சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த பாலம் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. பாலம் இடிந்து விழுந்ததற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. தற்போது முதற்கட்டமாக இடிந்து விழுந்த பாலத்தின் பகுதிகளை ஆற்றில் இருந்து தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
சமீபத்திய தொடர்சியாக பாலம் இடிந்து விழும் விபத்துகள் தொடர்பாக மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலம் முழுவதும் புதியதாக கட்டப்பட்டு வரும் பாலங்களின் தரம் மற்றும் தற்போதைய கட்டுமான நிலைப்பாடு, அதே போல, பழைய பாலங்களின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்து அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க ஒரு குழுவை நியமித்துள்ளார்.
கடந்த ஜூன் 18 முதல் பீகார் மாநிலத்தின் கிஷன்கஞ்ச் , அராரியா , கிழக்கு சம்பாரண், மதுபானி , சிவன் மற்றும் சரண் ஆகிய பகுதிகளில் இதுவரை 10 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.