தர்மசாலை அமைக்க தர்மம் எடுத்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை தானமளித்த பார்வையற்ற முதியவர்!
தர்ம சாலை அமைக்கும் பணிக்காக தர்மம் எடுத்து சேமித்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை தானம் அளித்த பார்வையற்ற முதியவர் ராஜப்பா.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் 63 வயது முதியவர் ராஜப்பா. இவருக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கிடையாது, இருந்த உறவினர்களும் இறந்து விட்டனர். எனவே, அருகில் உள்ள குடுவாஞ்சேரி எனும் கிராமத்தில் சென்று வசித்து வருகிறார். அங்கு இவருக்கு கோவிந்தராஜ் என்பவர் ஆதரவளித்து, தனது வீட்டில் தங்க வைத்துள்லாராம். இந்நிலையில், ராஜப்பா பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரக்கூடிய அருட்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சபைக்கு சென்று தான் தினமும் உணவருந்தி வருவாராம்.
முதியவரான ராஜப்பா வெளியில் சென்று பொதுமக்கள் தனக்கு அளிக்கக்கூடிய பணத்தை சிறுக சிறுக சேமித்து வைத்துள்ளார். இதுவரை தர்மம் எடுத்து சேமித்து வைத்திருந்த பணம் பத்தாயிரம் ரூபாய் இருந்துள்ளது. ஆதரவற்ற நிலையில் இருக்கக் கூடியவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் அளிக்கக்கடிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சபையில் தர்ம சாலை அமைக்கும் பணி நடைபெற்று உள்ளது. இந்நிலையில், சத்திய சாலையில் நடைபெறும் தர்மசாலை அமைக்கும் பணிக்காக அந்த சத்திய சபை நிர்வாகி மனோகரன் என்பவரிடம் இவர் தர்மம் எடுத்து சேமித்து வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை நேற்று வழங்கியுள்ளார். பார்வையற்ற நிலையிலும் தான் சேமித்த பணத்தை மற்றவர்களுக்கு தானம் செய்த முதியவர் ராஜப்பாவின் செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.