கர்நாடகாவில் தெருநாய் கடித்து 4 வயது சிறுமி உயிரிழந்த சோகம்.!
சென்னை: தமிழகத்தில் தெருநாய் கடி சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகாவில் தெருநாய் கடித்து நான்கு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கொரவினாஹலா கிராமத்தை சேர்ந்த கீரலிங்கா, தனது மனைவி மற்றும் 4 வயது மகள் லாவன்யாவுடன் வசித்துவந்தார். 15 தினங்களுக்கு முன், லாவன்யா சாலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை தெருநாய்கள் துரத்தித் துரத்திக் கடித்திருக்கின்றன.
இதனால், படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், அது பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். நாய் கடித்து 4 வயது சிறுமி உயிரிழந் சம்பவம் அந்த சிறுமியின் குடும்பத்தினர் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதனிடையே, சிறுமியை தாக்கிய அதே நாளில் கிராம மக்களால் அந்த நாய் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, உயிரிழந்த சிறுமியின் தந்தை தனது மகளுக்கு நேர்ந்த கதி கிராமத்தில் உள்ள மற்ற குழந்தைகளுக்கும் ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அந்த கிராம ஊராட்சி வளர்ச்சி அலுவலர் கூறுகையில், இச்சம்பவம் குறித்து நேற்றைய தினம் தகவல் கிடைத்ததும், மக்களைத் தாக்கும் தெருநாய்களைக் கண்டறிய மீட்புக் குழு அனுப்பப்படும் என்றார்.