7 வயது சிறுவனை கடத்தி ரூ.3,00,000 கேட்டு மிரட்டிய 10-ம் வகுப்பு மாணவன்..!
தெலுங்கானா மாநிலம் மீர்பேட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அர்ஜுன் என்ற 7 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீர் அந்த சிறுவன் காணாமல் போய்விட்டார்.
சிறுவனின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் காணவில்லை. இதை தொடர்ந்து சிறுவனின் தந்தைக்கு போன் ஒன்று வந்தது. அதில் மர்ம நபர் ஒருவர் ரூ.3 லட்சம் கொடுத்தால் உங்களது மகனை விட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். போன் எண்ணை வைத்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் 3 மணி நேரத்தில் சிறுவனை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும் கடத்தியவரையும் கைது செய்தனர். விசாரணையில் அர்ஜுனை கடத்தியவர் அர்ஜுன் படிக்கும் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவன் என தெரிய வந்தது.இது குறித்து போலீசார் கூறுகையில், அர்ஜுனை பள்ளியில் பார்த்த அந்த மாணவன் அர்ஜுனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டு உள்ளார்.
இதனால் அர்ஜுனுடன் நட்பாக பேசி வந்து உள்ளார்.அந்த மாணவன் அர்ஜுனை அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு கோவிலுக்குள் உட்கார வைத்து விட்டு அர்ஜுனின் தந்தைக்கு போன் செய்து மிரட்டி உள்ளார்.
அர்ஜுனின் தந்தை ராஜுவிடம் பேசும்போது தனது குரலை மாற்றி பேசி உள்ளார் என்பதும் தெரியவந்தது. கடத்தியவர் 10ம் வகுப்பு மாணவன் என்பதால் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளோம் என கூறினார்கள்.