மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 90 % பேர் மில்லியனர்கள்….42% பேர் மீது கிரிமினல் வழக்கு…!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டு பல துறைகளில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி,36 பேர் புதிய மத்திய இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்.முன்னதாக,மத்திய இணை அமைச்சர்களாக இருந்த 7 அமைச்சர்கள் பதவி உயர்வு பெற்றனர். இதன்மூலம், பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 78 ஆக உள்ளது.
இந்நிலையில்,நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் உள்ள 78 அமைச்சர்களில், குறைந்தது 42% பேர் மீது கொலை, கொலை முயற்சி போன்ற கிரிமினல் வழக்கு உள்ளது என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) கருத்துக் கணிப்பு உரிமைக் குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
ஏ.டி.ஆர் என்பது ஒரு தேர்தல் உரிமைக் குழுவாகும், இது தேர்தல்களுக்கு முன்னதாக அடிக்கடி அறிக்கைகளை வெளியிடுகிறது.இதன்மூலமாக, அரசியல்வாதிகளின் குற்றவியல், நிதி மற்றும் பிற பின்னணி விவரங்களை அறிய முடியும்.
மேலும், புதிய மத்திய அமைச்சரவையில் 70 (90 சதவீதம்) அமைச்சர்கள் மில்லியனர்கள், அதாவது அவர்கள் மொத்த சொத்து மதிப்பு 10 மில்லியனுக்கும் (ஒரு கோடி) அதிகமாக உள்ளதாக ஏடிஆர் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.அதன்படி,
- ஜோதிராதித்யா சிந்தியா – ரூ.379 கோடிக்கு மேல்
- பியூஷ் கோயல் – 95 கோடிக்கு மேல்
- நாராயண் ரானே- ரூ.87 கோடிக்கு மேல்
- ராஜீவ் சந்திரசேகர் – ரூ.64 கோடிக்கு மேல்
ஆகிய நான்கு அமைச்சர்கள் ‘உயர் சொத்து அமைச்சர்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.அதாவது அவர்கள் 50 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும்,மிகக்குறைந்த சொத்துக்களை உள்ளதாக அறிவித்த அமைச்சர்கள்
- திரிபுராவைச் சேர்ந்த பிரதிமா பூமிக் – 6 லட்சத்துக்கு மேல்
- மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜான் பார்லா – 14 லட்சத்துக்கு மேல்,
- ராஜஸ்தானைச் சேர்ந்த கைலாஷ் சவுத்ரி – 24 லட்சத்துக்கு மேல்,
- ஒடிசாவைச் சேர்ந்த பிஷ்வேஸ்வர் துடு – 27 லட்சத்திற்கு மேல்,
- மகாராஷ்டிராவைச் சேர்ந்த வி முரளீதரன் – 27 லட்சத்துக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.