90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்… நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!
லார்சன் & டூப்ரோவின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன், வாரத்தில் 90 மணி நேர வேலை என்று கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், “வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்” என ஊழியர்களுக்கு அறிவுறுத்திய L & T தலைவரை, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் விமர்சித்துள்ளார்.
அதாவது, L&T (லார்சன் அண்ட் டூப்ரோ) நிறுவனதலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் “ஒரு வாரத்துக்கு 90 மணிநேரம் நீங்கள் வேலை செய்தால்தான் இந்திய பொருளாதாரம் வளரும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் உங்களை என்னால் வேலைக்கு வர வைக்க முடியவில்லை என்பதால் வருத்தமாக உள்ளது. ஞாயிற்றுக் கிழமை வீட்டில் என்ன செய்யப் போகிறீர்கள்? எவ்வளவு நேரம் மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டே இருப்பீர்கள்?நான் ஞாயிறு அன்றும் வேலை செய்கிறேன்” என பேசியிருக்கிறார்.
இவ்வாறு, L&T நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பலரும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவரது கருத்திற்கு நடிகை தீபிகா படுகோன் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்.
இதற்கு கடும் விமர்சனத்தை முன்வைத்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “இத்தகைய மூத்த பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது அதிர்ச்சியளிக்கிறது. அதோடு, Mental Health Matters.” (மனநலம் முக்கியம்) என்ற ஹேஷ்டேக்கை அவர் பதிவிட்டுள்ளார்.
ஒரு தொழிலதிபர் இதுபோன்ற தெளிவற்ற அறிக்கைகளை வெளியிடுவதும், இந்தியாவின் பணியாளர்களிடம் இருந்து உண்மையற்ற கோரிக்கைகள் வைப்பதும் இது முதல் முறை அல்ல. முன்னதாக, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்ஆர் நாராயண மூர்த்தி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வாரத்தில் 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று இந்தியர்களிடம் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.