9 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை .. சிறுமியின் பெற்றோருக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்..!
டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
தென்மேற்கு டெல்லியில் டெல்லி கன்டோன்மென்ட் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்பது வயது சிறுமியை பாதிரியார் மற்றும் மூன்று தகன மேடை ஊழியர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாகக் கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் உட்பட நான்கு பேர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
துணை போலீஸ் கமிஷனர் பிரதாப் சிங் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில், சுடுகாட்டிற்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்த 9 வயது சிறுமி, சுடுகாட்டில் தண்ணீர் தொட்டிக்கு குடிநீர் எடுக்க சென்றார். அப்போது பாதிரியார் மற்றும் மூன்று தகன மேடை ஊழியர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர்.
வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் சுடுகாட்டில் சென்று சிறுமியின் தாய் தேடியபோது பாதிரியார் உங்க மகள் தண்ணீர் பிடிக்க வந்த போது தண்ணீர் தொட்டியில் இருந்த மின் வயரை தொட்டதால் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார் என கூறியுள்ளார். மேலும், போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் பிரேத பரிசோதனை செய்வார்கள். அதனால் சுடுகாட்டிலேயே எரித்து விடுங்கள் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, சிறுமியின் உடலை சுடுகாட்டிலேயே தகனம் செய்தனர் என தெரிவித்தார்.
பின்னர், சிறுமியின் தாய்க்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடைப்படையில் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். புகாரை தொடர்ந்து பாதிரியார் மற்றும் மூன்று தகன மேடை ஊழியர்களிடம் நடத்தி விசாரணையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர் என கூறினார்.
இந்நிலையில், இன்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை நாளை சந்திக்க போகிறேன் என்று கெஜ்ரிவால் நேற்று இந்தியில் ட்வீட் செய்து இருந்தார்.