சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் 9 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!
சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது நக்சல்கள் தாக்குதலில் படைவீரர்கள் 9 பேர் பலியாகினர்.
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து முடிந்து திரும்பும்போது நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து ஐஈடி வெடிகுண்டுகளை வீசி வெடிக்கச் செய்துள்ளனர்.
இதில் வாகனத்தில் சென்ற 9 வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் இந்த குண்டுவெடிப்பில் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் 5 நக்சல்கள் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, இந்த தாக்குதலில் குறைந்தது 100 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மதியம் 2:20 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்புப் படையினர் மீது நக்சலைட்டுகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்று மேஜர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.