காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட 6 முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட 9 பேர் பாஜகவில் ஐக்கியம்!
BJP: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சுயேட்சை உட்பட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். கடந்த மாதம் இமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற வைத்தார்கள்.
இதனால், காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் சிங்வி தோல்வி அடைந்தார். இந்த செயலால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி தலைமை அந்த 6 எம்எல்ஏக்களை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது. அதேசமயம், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த 3 சுயட்சைகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரும் சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், அந்த மூன்று சுயேட்சை எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், அம்மாநிலத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு, மே 7ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
எனவே, 68 இடங்களை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் ஒரு கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றால் 35 எம்எல்ஏகளின் ஆதரவு தேவை. ஆனால், தற்போது 6 எம்எல்ஏக்கள் நீக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 34 குறைந்து பெரும்பான்மையை இழந்துள்ளது. மறுபக்கம்ம் பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்கள் உள்ளன. இதனால் இமாச்சல அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்த சூழலில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் 3 சுயேட்சை உட்பட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்களுடன் பதவியை ராஜினாமா செய்த 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் என மொத்தம் 9 பேர் டெல்லியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் இமாச்சல் பாஜக தலைவர் ராஜீவ் பிண்டல் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமானார்கள்.