சத்தீஷ்கரில் ஆட்டோ மீது மோதிய எஸ்யூவி கார்: 9 பேர் பலி..!
சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இன்று பிற்பகல் சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள கோண்டாகான் தெஹ்சில் அமைந்துள்ள போர்கான் என்ற கிராமத்தில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் பலத்த காயமடைந்ததாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். அவ்விடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 30 இல் ஒரு ஆட்டோ ரிக்சா மீது ஒரு எஸ்யூவி மோதியுள்ளது. இந்த ஆட்டோ ரிக்சாவில் மொத்தம் 16 பேர் இருந்துள்ளனர்.
இந்த விபத்திற்கு பின் எஸ்யூவி ஸ்கார்பியோவின் டிரைவர் காரை விட்டு உடனடியாக தப்பி ஓடியுள்ளார். இந்த ஆட்டோ ரிக்சாவில் இருந்தவர்கள் கோட்மா கிராமத்தில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, பின்னர் தங்களது சொந்த ஊரான பாண்டேத்துக்குத் திரும்பியுள்ளனர். அப்போது ராய்பூரிலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ள ஃபராஸ்கான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போர்கான் திருப்பத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், மோதிய அந்த எஸ்யூவி ஜக்தல்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளது. இதன் பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை அருகில் உள்ள ஃபராஸ்கான் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராய்பூரில் உள்ள மருத்துவமனைக்கு காயமடைந்தவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் ஆட்டோ ரிக்சாவில் இருந்த டிரைவர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், எஸ்யூவியில் தப்பியோடியவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.