மினிமம் பேலன்ஸ் அபராதம் ரூ.8,500 கோடி.! ராகுல் காந்தி காட்டம்.!
டெல்லி : நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் கடந்த வாரம் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில், பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு, விவசாயிகளுக்கு போதிய திட்ட அறிவிப்புகள் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் இதே கருத்தை முன்வைத்தார். மேலும், மகாபாரதத்தை குறிப்பிட்டு சக்கரவியூகத்தில் அபிமன்யூ சிக்கியிருப்பது போல பிரதமர் மோடியிடம் மக்கள் சிக்கியுள்ளனர் என குறிப்பிட்டு. விரைவில் சக்கரவியூகம் உடைக்கப்படும் எனவும் மக்களவையில் ராகுல் காந்தி பேசியிருந்தார்.
இந்நிலையில், வங்கிகளில் பிடித்தம் செய்யப்படும் மினிமம் பேலன்ஸ் அபராதத்தொகை குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில், நரேந்திர மோடியின் ஆட்சியில் சாமானிய இந்தியர்களின் வெற்றுப் பைகளில் இருந்து கூட அபராத தொகை வசூல் செய்யப்படுகிறது.
தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடியை தள்ளுபடி செய்த மத்திய அரசு, குறைந்தபட்ச இருப்புத் தொகையை கூட பராமரிக்க முடியாத ஏழை இந்தியர்களிடம் இருந்து ரூ.8,500 கோடியை மினிமம் பேலன்ஸ் அபராத தொகையாக வசூலித்துள்ளது.
‘பெனால்டி சிஸ்டம்’ என்பது மோடியின் சக்கரவியூகத்தின் ஓர் பகுதி. இதன் மூலம் சாமானிய இந்தியனின் முதுகை உடைக்கும் முயற்சி நடைபெறுகிறது. ஆனால், நினைவில் கொள்ளுங்கள், இந்திய மக்கள் அபிமன்யு அல்ல, அர்ஜுனர்கள். உங்கள் ஒவ்வொரு அட்டூழியத்திற்கும் சக்ரவியூகத்தை உடைத்து எப்படி பதில் சொல்வது என்று அவர்களுக்குத் தெரியும் என தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.