7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?
தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் பள்ளிகளில் 7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர்கள் பற்றிய பாடங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும் NCERT பரிந்துரைக்கும் பாடத்திட்டங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அவ்வப்போது சில பாடத்திட்ட மாற்றங்களை NCERT பறித்துரைத்து வருகிறது.
அதன்படி, 7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் பற்றி இருக்கும் பாடத்திட்டங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக இந்திய பாரம்பரியம், கலாச்சாரம் எனக் குறிப்பிட்டு இந்திய அரசர்கள் பற்றிய பாடத்திட்டமும்,மகா கும்பமேளா பற்றிய பாடத்திட்ட குறிப்புகளும் அதில் இடம்பெற்றுள்ளன என PTI செய்திகுறிப்பிட்டுள்ளது.
புனித நிலம் என்ற தலைப்பின் கீழ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அத்தியாயத்தில், இந்து மதம், புத்த மதம், சீக்கியம், இஸ்லாம், கிறிஸ்தவம், யூத மதம் உள்ளிட்ட மதங்களுடன் தொடர்புடைய இந்தியாவிற்குள்ளும் வெளிநாட்டிலும் உள்ள புனிதத் தலங்கள் மற்றும் புனித யாத்திரைத் தலங்களை பற்றிய பாடத்திட்டங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும், 12 ஜோதிர்லிங்கங்கள், சார் தாம் யாத்திரை மற்றும் சக்தி பீடங்கள் போன்ற குறிப்பிடத்தக்க இடங்களை பற்றியும் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவை புனித யாத்திரை பூமி என்று ஜவஹர்லால் நேரு வர்ணித்ததன் ஒரு மேற்கோள் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில் மகா கும்பமேளா பற்றியும் அதில், 66 கோடி மக்கள் கலந்து கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில், தனிநபர்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க அனுமதிக்கப்படவில்லை. 2004ஆம் ஆண்டு, ஒரு குடிமகன் தேசத்தின் மீது பெருமையை வெளிப்படுத்தும் உரிமையை வலியுறுத்தி நீதிமன்றத்தில் அந்தக் கட்டுப்பாட்டை எதிர்த்துப் போராடியபோது இது மாறிய சம்பவங்கள் புதிய பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுவரை வெளியிடப்பட்ட பாடப்புத்தகத்தின் முதல் பகுதி மட்டுமே என்றும், இரண்டாம் பகுதி பின்னர் வெளியிடப்படும் என்றும் NCERT அதிகாரிகள் தெரிவித்ததாக PTI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி
April 28, 2025
செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!
April 28, 2025