திருப்பதி கோவில் நாவிதர்களின் வேலை நிறுத்த போராட்டம் தள்ளிவைப்பு..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் பணியை செய்யும் நாவிதர்கள், மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம், இலவச மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக திருப்பதி கோவில் நாவிதர்கள் அறிவித்து இருந்தனர்.
இதையடுத்து நிதி மந்திரி ராமகிருஷ்ணுடு நேற்று மாலை நாவிதர்களை பேச்சு வார்த்தை நடத்த ஆந்திர தலைமை செயலகத்துக்கு அழைத்து இருந்தார்.
அதன்படி நாவிதர்கள் சங்கத்தினர் தலைமை செயலகம் சென்றனர். பேச்சு வார்த்தை முடிந்து நாவிதர்கள் வெளியே வந்தனர்.
அப்போது டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு முதல்-மந்திரி சந்திரபாபு தலைமை செயலகத்துக்கு வந்தார்.
அவர் நாவிதர்களை பார்த்ததும் திடீரென்று ஆவேசம் அடைந்தார். “நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? யார் உங்களை அழைத்தார்கள்? தலைமை செயலகம் கோவில் போன்றது.
இது என்ன மீன் மார்க்கெட்டா? கூட்டமாக வந்து இருக்கிறீர்கள் என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு நாவிதர்கள் தங்கள் கோரிக்கைகளை சந்திரபாபு நாயுடுவிடம் கூறினர்.
இதனால் மேலும் ஆவேசம் அடைந்த சந்திரபாபு நாயுடு, சம்பளத்தை உயர்த்தி தர முடியாது. போய் வேலையில் சேருங்கள் என்று நாவிதர்களை பார்த்து எச்சரித்தப்படி பேசினார்.
மேலும் அவர்களை நோக்கி கையை காட்டி அருகில் சென்று ஆவேசமாக பேசியதால் தலைமை செயலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. உடனே பாதுகாவலர்கள் சந்திர பாபு நாயுடு அருகே நாவிதர்கள் வராதபடி தடுத்து நிறுத்தினார்கள். அதன்பின்னர் சந்திரபாபு நாயுடு தனது அறைக்கு சென்றார்.
நாவிதர்கள் கூறும் போது, “நாங்கள் தலைமை செயலகத்துக்கு வரக் கூடாதா? எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேச தான் வந்தோம். எங்களுக்கு மாத ஊதியம் தர ஏற்பாடு செய்ய வேண்டும். திருப்பதி தேவஸ்தானத்திற்கு முடி காணிக்கை மூலம் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. எங்களுக்கு சம்பளம் கொடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றார்.
இதற்கிடையே முதல்-மந்திரி சந்திரபாபு சமாதானம் அடைந்து நாவிதர்கள் கோரிக்கைகள் பற்றி வருகிற 25-ந்தேதி பேச உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து திருப்பதி கோவில் நாவிதர்கள் இன்று தொடங்க இருந்த வேலை நிறுத்த போராட்டத்தை தள்ளி வைத்தனர்.