இந்தியாவில் 70 பேர் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் – மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர்!
இந்தியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸால் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதன்முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் பரவி வருவதுடன், இந்தியாவிலும் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மக்களவையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்களிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
அதில், இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்படக்கூடிய மரபணு மாறுபாடுகளைக் கண்டறியும் பணியில் நாட்டில் 28 ஆய்வகங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகவும், இந்த ஆய்வகங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 58,240 பேரின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இதில் 46,124 மாதிரி பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும், அதில் டெல்டா வகை வைரஸ் 17,168 மாதிரிகளில் இருந்ததாகவும், ஆல்பா வகை 4,172 மாதிரிகளில் இருந்தது கண்டறியப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், 217 மாதிரிகளில் பீட்டா வகையும், ஒரு காமா வகையும் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், கடந்த ஜூலை 23-ஆம் தேதி வரை இந்தியாவில் 70 பேர் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது எனவும், அதில் அதிக பட்சமாக மகாராஷ்டிராவில் தான் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய பிரதேசத்தில் 11 பேரும் தமிழகத்தில் 10 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.