புதுச்சேரியில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி!
புதுச்சேரியில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா, டெங்கு, ஃப்ளூ, பன்றிக் காய்ச்சல் போன்ற பல்வேறு வகையான காய்ச்சல்கள் பரவி வருகிறது. இந்த காய்ச்சல்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவியதால் மருத்துவமனைகளில் குழந்தைகள் அனுமதி அதிகரித்தது.
பின்பு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து காய்ச்சல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரியில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தகவல் தெரிவித்துள்ளார். இதில் 2 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார்.
இதனிடையே, புதுச்சேரியில் 10 பேருக்கு Influenza காய்ச்சல் தொற்று இருப்பதாகவும், புதுச்சேரி, காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் 201 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.