சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் 2 பெண்கள் உள்பட 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அதுமட்டுமில்லாமல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கி உட்பட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும், கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அந்த பகுதியில் இன்னும் தேடுதல் பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே அபுஜ்மத் வனப்பகுதி நக்சலைட்டுகளின் கோட்டையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கிசூடு சம்பவம் நடந்து வருகிறது. அந்தவகையில் கடந்த 15 நாட்களில் நக்சலைட்டுகள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும்.
இந்த சம்பவத்துடன், நாராயண்பூர் மற்றும் கான்கேர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய மாநிலத்தின் பஸ்தார் என்ற பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இந்த ஆண்டு இதுவரை 88 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் குறிப்பாக கடந்த 16ம் தேதி, கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடத்திய துப்பாக்கிசூட்டில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது 7 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.