மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?
முன்னாள் பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இதை தொடர்ந்து, இன்று திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து, ஒரு வாரம் (7 நாட்கள்) துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதேவேளை, இன்று காலை மத்திய அமைச்சரவை கூடுகிறது. பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூடி மன்மோகன் சிங்கிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றவுள்ளது. மேலும், மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடக்க உள்ளது.
இந்த நிலையில், மன்மோகன் சிங்கின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தற்பொழுது, அவரது உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலிக்கு பின், மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நாளை (டிச., 28) நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தகவல் தெரிவித்துள்ளார்.