உத்தர பிரதேசத்தில் கல்லறையிலிருந்து துணிகளை திருடி விற்பனை செய்த 7 பேர் கைது!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத்தில் கல்லறையிலிருந்து துணிகளை திருடி விற்பனை செய்ததாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் எனுமிடத்தில் உள்ள பாரத் அலோக் சிங்கின் வட்டார அலுவலர் காவல்துறையில் ஒரு உள்ளூர் துணி வியாபாரி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது புகார் அளித்துள்ளார். அதாவது கல்லறையில் உள்ள இறந்தவர்களின் துணிகளை திருடி அவற்றை விற்பனை செய்வதாக கூறியுள்ளார். மேலும் இவர்கள் இப்போதல்ல கடந்த 10 ஆண்டுகளாக இவ்வாறு செய்து வருவதாகவும், துணி வியாபாரி தனது உதவியாளர்களுக்கு தினமும் 300 ரூபாய் கூலியாக கொடுத்து இந்த வேலையை செய்ய சொல்வதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து விசாரித்த காவல்துறையினர் 7 பேரை கைது செய்துள்ளனர். அதாவது துணி வியாபாரி பிரவீன் ஜெயின் மற்றும் அவரது மகன் ஆஷிஷ் ஜெயின் அவரது மருமகன் ஷெரிப் ஜெயின் மற்றும் உதவியாளர்கள் ஆகிய ராஜு ஷர்மா, ஷ்ரவன் ஷர்மா மற்றும் சாருக்கான் உள்ளிட்ட 7 பேரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். இவர்கள் பல்வேறு சட்டைகள், தோத்திகள், குர்தாக்கள் ஆகியவற்றை கல்லறையில் இருந்து திருடி அவற்றிற்கு வேற ஒரு நிறுவனத்தின் பெயர்களை ஸ்டிக்கர்களை ஒட்டி விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.