இனி வீதியில் இறங்கி போராடபோவதில்லை.. மல்யுத்த வீராங்கனைகள் அதிரடி அறிவிப்பு.!
இனி வீதியில் இறங்கி போராடபோவதில்லை என்றும் சட்ட போராட்டம் தொடரும் என்றும் மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பல வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வந்தனர். பின்னர் சரண் சிங் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
டெல்லி புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி, பதக்கங்களை கங்கையில் விடும் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை அடுத்து மத்திய அமைச்சர் உடனான பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு, தற்காலிகமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்தனர்.
இதற்கிடையில், பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக டெல்லி போலீசார் கடந்த 16ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 1500 பக்கங்கள் கொண்ட அந்த குற்ற பத்திரிக்கையில் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆறு வீராங்கனைகளின் விரிவான வாக்குமூலங்கள் அதில் இடம்பெற்று உள்ளன. மேலும், ஜூலை 11ஆம் தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்து இருந்தது.
இதனை கருத்தில் கொண்டு இனி நீதிமன்றத்தில் மட்டுமே சட்ட போராட்டம் நடத்தப்படும் எனவும், வீதியில் இறங்கி போராட போவதில்லை என்றும் மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். இதனை வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.