60 கி.மீ.க்கு இடையில் உள்ள சுங்கச்சாவடிகள் மூடப்படும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!
60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு.
தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருக்குமானால் 3 மாதத்திற்குள் அகற்றப்படும் எனவும் டெல்லி நாடாளுமன்ற மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான, எம்பியுமான தொல். திருமாவளவன் இதுதொடர்பாக கோரிக்கை வைத்த நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பை வெளியிட்டார்.
இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர், 2024-ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் சாலையைப் போன்று நாட்டின் சாலைகள் சிறப்பாக இருக்கும். சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது விவசாயத்துடன் சுற்றுலாத் துறையிலும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். இந்த ஆண்டு முடிவதற்குள் ஸ்ரீநகர் முதல் மும்பை வரை சாலை வழியாக 20 மணி நேரத்தில் பயணிக்க முடியும் என்று அவர் உறுதியளித்தார்.
வருங்காலத்தில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு இரண்டு மணி நேரத்தில் சென்றடையலாம் என்றும் தெரிவித்தார். திறமையான தளவாட உள்கட்டமைப்பை அதிகரிக்க நாடு முழுவதும் 22 பசுமை நெடுஞ்சாலை வழித்தடங்கள் அமைக்கப்படும். புதிய சாலைகளை உருவாக்குவதற்காக வெட்டப்படும் மரங்களை நடுவதற்கு ஆயிரம் ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
மேலும், குறிப்பிட்ட இடத்தில் இரண்டு விபத்துகள் நடந்தால், அப்பகுதி கரும் புள்ளியாக அறிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் இரண்டு ஆண்டுகளுக்குள் மின்சார வாகனங்களின் விலை வெகுவாகக் குறையும் என்றும் கட்கரி உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.